காரைக்கால்: காரைக்கால் பெரமசாமிப் பிள்ளை வீதியில் கைலாஷ் என்பவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் மார்ச் 11-ல் போலி நகைகளை விற்க முயன்றது தொடர்பாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜெஸ்மாண்ட் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் ரூ.8 லட்சம் மதிப்பில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்ட வழக்கிலும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இவ்வழக்கில் ஜெரோம் ஜெஸ்மாண்ட்டின் பெண் நண்பரும், காரைக்கால் அம்மாள்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபருமான புவனேஸ்வரி (40) என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், விஜயவாடா அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்த புவனேஸ்வரியை தனிப்படை போலீஸார் கைது செய்து நேற்று காரைக்காலுக்கு அழைத்து வந்தனர்.
இந்த கும்பல் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அடகுக் கடைகளில் போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.