வினோதினி (எ) தமன்னா 
க்ரைம்

கோவையில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் சத்தியபாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றது. இதை தொடர்ந்து கடந்த 13-ம் தேதி கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் ‘ஃபேன்ஸ் கால் மி தமன்னா’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் புகை பிடித்தவாறும், கையில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றபடியும் வீடியோவை பதிவிட்டிருந்தார். மேலும் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்த பெண் பின்தொடர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கணுவாயில் தற்போது வசித்து வரும் வினோதினி (23) என்ற தமன்னா என்பதும், இவர் ஏற்கெனவே கோவையில் கஞ்சா வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு கைதானவர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், கோவை மாநகர போலீஸார் வினோதினி மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், "தான் ஆயுதங்களுடன் இருப்பது போன்று வரும் வீடியோ, 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. அப்போது டிரெண்டிங்குக்காக செய்யப்பட்டதுதான் இந்த வீடியோ. தற்போது நான் எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் வினோதினி, சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு சங்ககிரியில் வினோதினியை கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT