வேலூர்: வேலூர் அருகே காவல் துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்ற இரண்டு பேர் சிக்கினர்.
வேலூர் மாவட்டம் அரியூர் காவல் துறையினர் ஆவாரம் பாளையம் கிராமத்தில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (41), சோமாசிபாடி, புதுமை மாதா நகர், சர்ச் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (45) என்பது தெரியவந்தது. இதில், வின்சென்ட் ராஜ் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார்.
திருவண்ணாமலையில் பிரபாகரன் என்பவரது வீட்டில் எலெக்ட்ரீஷியன் வேலைக்காக பள்ளம் தோண்டியபோது இந்த சிலை கிடைத்ததாக கூறியுள்ளார். அந்த சிலையை விற்பனை செய்வதற்காக வந்தபோது காவல் துறையினரிடம் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிலையை வாங்க வந்தவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், அம்மன் சிலையின் மதிப்பு குறித்தும் அந்த சிலை எங்கு யாரால் திருடப்பட்டது என்றும் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.