தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் சின்ன வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(37). தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் மகன் அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.11,28,500 பெற்றுள்ளார். ஆனால் உறுதியளித்தபடி அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை.
ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணனை சந்தித்து புகார் அளித்தார். குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயராம் மேற்பார்வையில் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அலெக்சாண்டரை கைது செய்தனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை ஆகிய மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1,26,68,500 மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.