க்ரைம்

கும்பகோணம் | நாச்சியார்கோயிலில் நகையைப் பறிக்க முயன்றவர் கைது

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயிலில் பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்ற வெளிமாநிலத்தவர் ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏனநல்லூரைச் சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி செல்வி (51). மாத்தூரில் செங்கல்சூளை நடத்தி வரும் இவர்கள் 2 பேரும், கடந்த 7-ம் தேதி மாலை தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், செல்வி அணிந்திருந்த 3 பவுன் தங்கத் தாலி சங்கிலியைப் பறிக்க முயன்றனர். செல்வி சங்கிலியை விடாமல் பிடித்து கொண்டு கூச்சலிடவே 2 பேரும் தப்பியோடிவிட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்த நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் கே. ரேகாராணி மற்றும் போலீஸார், நேற்று கும்பகோணம் அரசு மருத்துவனை வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர், மகாராஷ்ட்ரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீம் அலி மகன் சபீர் அலி(36) என்பதும், சங்கிலி பறித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீஸார், அவரை கைது செய்து, வழக்கு பதிந்தனர். மேலும், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, கும்பகோணம் கிளைச் சிறையிலடைத்தனர். தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

போலீஸார் விசாரணையில், சபீர் அலி மற்றொருவரும், கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் பெங்களூரிலிருந்து வந்து, இப்பகுதியில் துணி வியாபாரம் செய்வதாக கூறி, மாலை நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களிடம் நகைகளைப் பறித்து வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தப்பியோடி மற்றொருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்ட பிறகு, வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து, நகைகளை பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்களா என்ற விபரங்கள் தெரிய வரும் என போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT