திருப்பூர்: திருப்பூர் ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில்,குட்டையை தூர் வாரும் பணியில் அப்பகுதியை சேர்ந்த சந்தியா (30) உட்பட 10 பெண்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி ஈரோடு வடக்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் பட்டுராஜ் (39), அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களிடம், மரத்தடி நிழலில் உறங்கி விட்டு ஊதியம் வாங்கி செல்கிறீர்களா என அவதூறாக பேசியுள்ளார்.
ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால், இருசக்கர வாகனத்தை ஏற்றி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து தப்ப முயன்ற பட்டுராஜை பிடித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, பட்டு ராஜை கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.