சிவகங்கை: சிவகங்கை காவலர்கள் குடியிருப்பு அருகே ரூ.200-க்காக மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கடந்த ஒரு வாரமாக சிவகங்கை நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகங்கை அருகே ஏனாபுரத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் (55). இவர் நேற்று முன்தினம் இரவு சிவகங்கையில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சிவகங்கை காவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு ரூ.200-ஐ பறித்துச் சென்றனர். ஆபத்தான நிலையில் இளங்கோவன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிவகங்கை டவுன் போலீஸார் வழக்கு பதிந்து 2 சிறுவர்களை கைது செய்தனர்.
இதேபோல் மார்ச் 6-ம் தேதி ,சிவகங்கை அருகே மதுரை சாலையில் வீரவலசை விலக்கு என்ற இடத்தில் ஆட்டோவில் ஆடுகளை ஏற்றிச் சென்ற 3 பேரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியைக் காட்டி ரூ.57,800 ஆயிரம், ஒரு பவுன் தங்கச் சங்கிலி, 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
இதில் சிறுவர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு, மானாமதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரிடமும், இளையான்குடி சாலையில் கூத்தாண்டன் அருகே சென்ற விவசாயிடமும் சிலர் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்தனர்.
கடந்த ஒரு வாரமாக சிவகங்கை நெடுஞ்சலைகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கஞ்சா புழக்கம் அதிகரிப்பாலும், போலீஸாரின் இரவு ரோந்து குறைந்து விட்டதாலும் வழிப்பறி அதிகரித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சிவகங்கை குற்றப்பிரிவில் போதிய போலீஸார் இல்லை.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் போலீஸார் சிலர் பணிபுரிந்து வருவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. தனியார் மதுக்கடைக்கு காவல் காப்பது, வாகனத்தை ஓட்டி வரும் மக்களுக்கு அபராதம் விதிப்பது போன்றவற்றில் காட்டும் ஆர்வத்தை வழிப்பறிச் சம்பவத்தை தடுப்பதிலும் போலீஸார் காட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘ கஞ்சா விற்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வழிப் பறியில் புதியவர்கள்தான் ஈடுபடுகின்றனர். பைக் வாங்குவதற்கு, கைச் செலவு போன்ற தேவைக்குக் கூட சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்காணித்து திருத்த பெற்றோரும் முன்வர வேண்டும், என்றனர்.