கும்பகோணம்: கும்பகோணத்தில் பாலீஸ் பட்டறையில் தங்க நகைகளைத் திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் பத்மநாபன் தெருவை சேர்ந்த ராஜா என்பவரும், கரிகாலன் என்பவரம் நகை பாலீஸ் போடும் கடை வைத்துள்ளனர். இவர்கள் கடந்த 5-ம் தேதி காலை கடைக்கு சென்று பார்த்த போது, கடை உடைக்கப்பட்டு அதிலிருந்து 55 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்கள் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸார், சிசிடிவி, செல்போனில் பேசிய ஆதாரங்களைக் கொண்டு காரைக்கால், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருச்சி, குட்ஷெட் சாலையில் பதுங்கியிருந்த அதே பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் மகன் ஜான்போஸ்(37) மற்றும் திருச்சி, அடைக்கல மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் முருகவேல்(33) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.