புதுச்சேரி: பேக்கரியில் மாமூல் கேட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக சிசிடிவி விளங்கியுள்ளது.
புதுச்சேரி காந்தி வீதியில் பேக்கரி வைத்திருப்பவர் சண்முக சுந்தரம். இவரது கடைக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதுச்சேரி வைத்தி குப்பத்தைச் சேர்ந்த எலி கார்த்திக் (எ) கார்த்திகேயன் (30), வாணரப்பேட்டையைச் சேர்ந்த மதி (எ) மணிகண்டன் (29) ஆகியோர் வந்து மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவா (எ) சிவராஜைத் தாக்கியதுடன், உரிமையாளரை மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த சிவா, சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பெரிய கடை போலீஸார் வழக்குப் பதிந்து எலி கார்த்தி, மதி ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கணேஷ் ஞானசம்பந்தம் ஆஜரானார். விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட எலி கார்த்திக், மதி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறையும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் பேக்கரியில் மிரட்டி தாக்குதல் செய்த விஷயங்கள் பதிவாகி தண்டனை தருவதற்கு முக்கிய சாட்சியாக சிசிடிவி திகழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.