திருப்பூர்: கட்டட மதிப்பீட்டு அறிக்கை வழங்க ரூ. 75 ஆயிரம்லஞ்சம் பெற்ற உதவி செயற்பொறியாளரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்( 42). இவர் சில மாதங்களுக்கு முன் சொத்து ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான பத்திரப்பதிவை திருப்பூர் நெருப்பெரிச்சரில் ஜாயின்ட் 2 அலுவலகத்தில் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, கட்டிடத்தின் மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, மதுரையில் உள்ள உதவி செயற்பொறியாளர்(கட்டிடம்) ராமமூர்த்தி, நிலத்தை கள ஆய்வு செய்துள்ளார். பின்னர், மதிப்பீட்டு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சமாக தருமாறு ராமூர்த்தி, கோபாலகிருஷ்ணனிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். போலீசார் அளித்த அறிவுரையின்படி, ரசாயணம் தடவப்பட்ட பணத்தை, செயற்பொறியாளரின் உதவியாளர் குமாரிடம் கோபாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸார் குமாரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவரது காரில் சோதனை செய்தபோது, கணக்கில் காட்டப்படாத 6 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவியாளர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், குமாரை கைது செய்து தலைமறைவாக உள்ள ராம மூர்த்தியை தேடி வருகின்றனர்.