சென்னை: கனடா நாட்டு சுற்றுலாப் பயணியிடம் நூதன முறையில் பணம், பொருள்அபகரித்த, போலி போலீஸ் அதிகாரியை சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீதரதாஸ்(67). அண்மையில் சென்னை வந்த இவர், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார். கடந்த 3-ம் தேதி பாண்டிபஜாரில் தன்னிடம் இருந்த வெளிநாட்டு டாலரை, இந்தியப் பணமாக மாற்றிக் கொண்டு, அங்கேஅமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் ஸ்ரீதரதாஸிடம் பேச்சுக் கொடுத்து, தானும் வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று வருவதாகவும், இன்று இரவுமட்டும் அவரது அறையில் தங்கிக்கொள்ளலாமா என்றும் கேட்டுள்ளார்.இதற்கு ஸ்ரீதரதாஸ் ஒப்புக்கொண்டார்.
இருவரும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள லாட்ஜுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒருவர், தான் காவல் துறை அதிகாரிஎன்றும், அறையில் போதை பொருள்பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்ததால், அறையை சோதனைசெய்ய வேண்டும் என்றும் கூறினார்.
பின்னர், அறையை சோதனை செய்வதுபோல நடித்து, ஸ்ரீதரதாஸ் வைத்திருந்த ரூ.1.10 லட்சம்ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலானகூலிங்கிளாஸ், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான ஷு மற்றும் வெளிநாட்டு டாலர்ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஸ்ரீதரதாஸ், இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார்விசாரணை நடத்தியதில், போலீஸ்அதிகாரி எனக்கூறி பணத்தை அபகரித்துச் சென்றது, புதுக்கோட்டை நர்ச்சாந்துபட்டியைச் சேர்ந்த கலியமூர்த்தி (35) என்பது தெரியவந்தது.
அவரைப் பிடித்து விசாரித்ததில், கனடா நாட்டு பயணியின் அறையில் தங்கியிருந்தவர், கலியமூர்த்தியின் கூட்டாளி கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அஜி ஷெரீப் (45) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.