சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி ஆகிய நெடுஞ்சாலைகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகனங்களில் செல்வோரிடம் தொடர்ந்து வழிப்பறி நடப்பதாக புகார்கள் எழுந்தன.
மார்ச் 6ம் தேதி அதிகாலை, சிவகங்கை அருகேயுள்ள காயங்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார், ஆறுமுகம் ஆகிய இருவரும், சிவகங்கையில் ஆடுகளை வாங்கி சாகுல் ஹமீது என்பவரது ஆட்டோவில் ஏற்றினர். பின்னர், இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றனர்.
வீரவலசை விலக்கு என்ற இடத்தினருகே சென்றபோது, முத்துக்குமார், ஆறுமுகத்தை கத்தியை காட்டி வழிமறித்த 2 இளைஞர்கள், அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம், ஒரு பவுன் சங்கிலி, 2 மொபைல் போன்கள் ஆகியவற்றை பறித்தனர். மேலும், ஆட்டோவை ஓட்டிச் சென்ற சாகுல் ஹமீதுவிடம் இருந்து 7,800 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது சிவகங்கை அருகே வாணியங்குடியைச் சேர்ந்த விக்னேஷ் ( 23 ), சிவகங்கை ஆவாரங்காட்டைச் சேர்ந்த சந்தோஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள், 7 மொபைல் போன்கள், 3 பவுன் சங்கிலி ஆகியவற்றை மீட்டனர். இவர்கள் மூவரும் தான் நெடுஞ்சாலைகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர் என, போலீஸார் தெரிவித்தனர்.