சென்னை: சென்னையில் பெண்ணை ஏமாற்றி, ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் சடலம் போரூர் ஏரியில் மீட்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் நிஷாந்த் (29). பட்டதாரியான இவர், வடபழனியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துள்ளார்.
மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரிடம் ரூ.68 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிஷாந்த்துக்கும், தொழிலதிபர் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.
இது தொடர்பாக நிஷாந்தின் காதலி, மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த தொழிலதிபர், திருமணத்தை நிறுத்தினார். இதற்கிடையில்,நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் நிசாந்த் குறுந்தகவல் அனுப்பினார். பின்னர் அவர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையில், அவரது சடலம் நேற்று மீட்கப்பட்டது. இதுகுறித்து போரூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.