புதுச்சேரி: பழங்குடியினர் 7 பேரை சட்ட விரோதமாக காவலில் சித்ரவதைச் செய்து பொய் வழக்கு போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி விழுப்புரம், புதுச்சேரியில் போராட்டம் நடத்த கட்சியினர், சமூக அமைப்புகள் முடிவு செய்துள்ளனர்.
பெரியார் படிப்பகத்தில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரமேஷ், தலைவர் சிவகாமி, வக்கீல்கள் பூபால், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மீன்பிடிக்க சென்ற பழங்குடி இருளர் மீது பொய் வழக்கை காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் தொடர்ந்ததை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவிடக் கோரியும் வரும் 13-ம் தேதி புதுவையிலும், 20-ம் தேதி விழுப்புரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் கூறுகையில், “கடந்த 25.02.2023 அன்று நள்ளிரவு காட்டேரிக்குப்பம் காவல் நிலையம் அருகில் மீன் பிடிக்கச் சென்ற பழங்குடி இருளர் இருவர், விழுப்புரம் மாவட்டம் குமாரப்பாளையம் அருகிலுள்ள ஆறுபுளியமரம் கே.வி.பி. செங்கல் சூளையில் இருந்து என பழங்குடி இருளர்கள் 7 பேரை பிடித்துச் சென்று 28.02.2023 வரை காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் சட்ட விரோத காவலில் வைத்து கடுமையாக போலீஸார் தாக்கியுள்ளனர்.
பச்சை மிளகாய் சாறை பிழிந்து கண்களில் விட்டும், முகத்தில் தேய்த்தும் சித்ரவதைச் செய்துள்ளனர். கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை ஒத்துக்கொள்ள சொல்லி மேற்சொன்ன சித்ரவதைகளைச் செய்துள்ளனர். மேலும், நகை அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று திருட்டு நகைக் கொடுத்தாக சொல்ல சொல்லி துன்புறுத்திள்ளனர்.
கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இதில் இருவர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என்பதால் நீதிபதி ,போலீஸாரைக் கடுமையாக எச்சரித்து இருவரையும் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பவில்லை. பின்னர், இருவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். மற்றவர்கள் நீதிமன்றக் காவலில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவை அனைத்தும் பொய் வழக்குகள்.
இச்சம்பவம் குறித்து ஓர் உண்மை அறியும் குழு அமைத்து விசாரித்து மத்திய அரசு, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அறிக்கை அளிப்போம். உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் புதுச்சேரி காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படவில்லை. புதுச்சேரி அரசு உடனடியாக அனைத்துக் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்" என்றார்.
இக்கூட்டத்தில் சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலர் இராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் அந்தோனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயலாளர் அமுதவன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர் செல்வன் உட்பட பல கட்சி, சமூக அமைப்புத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர்கள் கலந்துகொண்டனர்.