சஞ்சய்ராஜா 
க்ரைம்

கொலை வழக்கில் கைதாகி விசாரணையின்போது தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு: கோவையில் போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கோவை: மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்தியபாண்டி(31). கோவை விளாங்குறிச்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 12-ம் தேதி இரவு, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கருப்பக்கால் தோட்டம் என்ற பகுதியில் சத்தியபாண்டியை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொன்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக 4 பேர் கடந்த மாதம் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆயுதங்களை மறைத்து வைக்க உதவியதாக தீத்திபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சஞ்சய்ராஜா, எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீஸார், 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு துப்பாக்கியை பறிமுதல் செய்ய சிவானந்தாபுரத்தில் உள்ள சஞ்சய்ராஜாவின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஒரு தோட்டா கிடந்தது. அது குறித்து விசாரிக்கும்போது, அதற்குரிய துப்பாக்கியை கரட்டுமேடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாக சஞ்சய்ராஜா கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை போலீஸார் நேற்று அதிகாலை கரட்டுமேட்டுக்கு அழைத்துச் சென்று துப்பாக்கியை தேடினர். அப்போது ஒரு மரத்தின் அருகேயிருந்த கல்லை அகற்றிய சஞ்சய்ராஜா, அதனடியில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, எஸ்.ஐ சந்திரசேகர் ஆகியோரை நோக்கி அடுத்தடுத்து சுட்டார். அவர்கள் சுதாரித்து விலகியதால் உயிர் தப்பினர். துப்பாக்கியை காட்டி மிரட்டியவாறு சஞ்சய்ராஜா தப்பிக்க முயன்றார். போலீஸார் எச்சரித்தும் சஞ்சய்ராஜா கேட்கவில்லை.

இதையடுத்து எஸ்.ஐ.சந்திரசேகர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சஞ்சய்ராஜாவின் இடதுகாலை நோக்கி சுட்டார். காலில் குண்டு பாய்ந்ததும் அவர் சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேரத்தனர். அங்கு அவரது காலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

SCROLL FOR NEXT