ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பைரகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணாரெட்டி மகன் உதயகுமார்(32). பொறியியல் பட்டதாரியான இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்தார்.
பணியில் இருந்தபோது, அமைச்சகத்தின் ஆய்வகத்தில் இருந்த ரகசியம் காக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், பணியிலிருந்து வெளியேறிய உதயகுமார், தான் புகைப்படமாக எடுத்த ஆவணங்களை இந்திய அரசுக்கு எதிராக உள்ள உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏஜென்சிகளிடம் பணத்துக்கு விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில், தளி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி மாதிரிப்பள்ளி அருகே உதயகுமாரை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவரது பின்னணியில் உள்ள ஏஜென்சிகள் யார் என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.