கடலூர்: குறிஞ்சிப்பாடியில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கொலை வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த2 பேரை போலீஸார் கைது செய் தனர்.
குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் முருகவேல் மகன் சுந்தரமூர்த்தி (38), குறிஞ்சிப்பாடி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளி எதிரே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவர் கடந்த 27-ம் தேதிஇரவு கடையை மூடிவிட்டு பைக்கில்வீட்டிற்கு சென்றபோது, கூடா நட்பு விவகாரத்தில் கூலிப்படையினர் இவரை வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி மனைவி சசிகலாவதி குறிஞ்சிப்பாடி போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இதில், குறிஞ்சிப்பாடி ராஜவீதியில் மளிகை கடை நடத்தி வரும் ஏழுமலை மனைவி சத்தியவதிக்கும், சுந்தரமூர்த்திக்கும் கூடா நட்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்டபிரச்சினையில் கடந்த ஆண்டு ஏழுமலை மனைவி சத்தியவதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏழுமலைக்கு மன வருத்தத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது.
இதனால் கூலிப்படையை ஏவி சுந்தரமூர்த்தியை கொலை செய்ய முடிவு செய்தார். கூலிப்படைக்கு ரூ.5 லட்சம் பேசி முன்பணமாக ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கூலிப்படையினர் கடந்த 27-ம் தேதி இரவு சுந்தரமூர்த்தியை வெட்டி கொலை செய்தனர்.
இதையடுத்து ஏழுமலை (47), கூலிப்படையைச் சேர்ந்த அய்யந்தூரைச் சேர்ந்த தரணிதரன் (31), வரதராஜன் பேட்டை துரைராஜ் (31) ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து கூலிப் படையைச் சேர்ந்த வடலூர் புதுநகர் மண்டை ஓடு என்கிற அஜித் (24), வடலூர் கழுகு என்கிற விக்னேஸ்வரன் (21) ஆகிய 2 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.