திண்டிவனம்: திண்டிவனம் அருகே தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை - கோடம்பாக்கம் ஒத்தவாடைத் தெருவைச் சேர்ந்தவர் கை.குருமூர்த்தி (50). சென்னை ஊரப்பாக்கம், வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் குமரகுரு (53), இவரது மனைவி மஞ்சுளா (46), மகன் விஜயன் (29). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் 4 பேரும் இன்று மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு பிற்பகல் குமரகுருவுக்கு சொந்தமான ஆட்டோவில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தீவனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்புறத்தில் தார் மற்றும் ஜல்லி ஏற்றிவந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி, சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த குருமூர்த்தி, குமரகுரு, மஞ்சுளா, விஜயன் ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக் குறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த 4 பேர்களின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.