சென்னை: சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப் படுவதாக கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா நேற்று கூறியதாவது: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரவி வந்தது. அந்த வீடியோ தொடர்பாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளோம்.
மேலும், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அந்தந்த பகுதி போலீஸார்சென்று, வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்பட வில்லை என்றும், அது தொடர்பான வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இது தொடர்பான வீடியோக்களை ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரப்புவோரை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பிரச்சினையை தூண்டுவதற்கு யாரேனும் முயற்சி செய்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். சென்னையில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.
பண்டிகையை கொண்டாடுவதற்காக அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்களே தவிர, வேறு எந்த பிரச்சினையும் இல்லை. சைபர் கிரைம் போலீஸார் மூலம் தொடர்ந்து சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.