சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை கைது செய்த போலீஸார், 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் போதைப் பொருட்கள் தடுப்புக்கான நடவடிக்கைகளை போலீஸார் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்கின்றனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், பெரியமேடு போலீஸார் அல்லிகுளம் இணைப்பு சாலையில் சந்தேகத்துக்கிடமான ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த ராமசந்தன் (22) என்பதும், ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 7.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் 2.1 கிலோ கஞ்சா வைத்திருந்த ரோஹித் (20), தினேஷ்(19) மற்றும் ரயில்வே எல்லை சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அருண்குமார் (24), பால கிருஷ்ணன் (21) ஆகிய 4 பேரையும், மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் ஆந்திராவில் இருந்து 7 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த சுகதன் (55) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து சுமார் 18 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.