க்ரைம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 77 வயது முதியவருக்கு பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கீரனூர் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் மூ.மணி(77). இவர், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குன்னம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், மணி ஜாமீனில் வெளியே வந்தார்.

பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிபதி எஸ்.முத்துகுமரவேல் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மணியை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ஆஜரானார்.

SCROLL FOR NEXT