கோவை: தன்னை போலீஸார் என் கவுன்ட்டரில் சுட்டுக்கொல்ல திட்டமிட்டுள்ளதாக ரவுடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம் (28). இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ராம் கொலை வழக்கு உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி, மோதல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் முன்பு கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, ரவுடிகளை போலீஸார் கைது செய்து வருகின்றனர். கவுதம் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை போலீஸார் தேடி வந்தநிலையில், கவுதம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிதடியில் ஈடுபட்டு வந்தேன். என் மேல் 10 முதல் 15 வழக்குகள் உள்ளன.
திருமணத்துக்கு பிறகு எந்த விவகாரத்திலும் ஈடுபடவில்லை. மனைவி, மாமியார், அவரது சகோதரி மீது போலீஸார் கஞ்சா வழக்கு போட்டுள்ளனர். என் மீது 7 வழக்கில் வாரண்ட் உள்ளது. இதற்காக என்னை என் கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல பார்ப்பது நியாயம் இல்லை. நான் திருந்தி வாழ நினைக்கிறேன்.
நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி விடு, இல்லாவிட்டால் சுட்டுப் பிடிக்க வேண்டி இருக்கும் என்று போலீஸார் சொல்கின்றனர். எனக்கு நீதி வேண்டும்” என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, கஞ்சா வழக்கு தொடர்பாக கவுதமின் மனைவி, அவரது சகோதரி, மாமியார் ஆகியோரை போலீஸார் சமீபத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘கவுதம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை தேடி வருகிறோம். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க, யாருடைய தூண்டுதலின் பேரிலோ இவ்வாறு பேசியிருக்க வாய்ப்பு உள்ளது. விசாரித்து வருகிறோம்,’’ என்றனர்.