திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளிக்கு மிதி வண்டியில் சென்ற 3 மாணவர்கள் மீது கட்டுபாட்டை இழந்து ஓடிய கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் (13) மற்றும் அவரது தம்பி சூர்யா (11) ஆகியோர் கிரி சமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் மிதி வண்டியில் வளையாம்பட்டு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யொட்டியுள்ள சர்வீஸ் (அணுகு) சாலை வழியாக பள்ளிக்கு சென்று வந்தனர்.
அதன்படி, இன்று காலை 8.15 மணியளவில் விஜய் தனது தம்பி சூர்யாவை அழைத்துக் கொண்டு மிதி வண்டியில் பள்ளிக்கு சென்றார். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த ரபீக் (13) என்ற மாணவரும் அவரது மிதி வண்டியில் ஒன்றாக சென்றுள்ளார்.
வாணியம்பாடி வளையாம்பட்டு யொட்டியுள்ள அணுகு சாலையில் மாணவர்கள் சென்றபோது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடி சாலையில் மத்தியில் இருந்த தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் பாய்ந்து அணுகு சாலையில் மிதிவண்டியில் பள்ளிக்கு வந்துக் கொண்டிருந்த மாணவர்கள் சூர்யா, ரபீக் மற்றும் விஜய் மீது பயங்கரமாக மோதிவிட்டு அங்கிருந்து சிறிது தொலைவு சென்று அங்கு நின்றது.
விபத்தை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து மாணவர்களை மீட்க முயன்றனர். கார் மோதிய வேகத்தில் பலத்த காயமடைந்த 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, காரில் இருந்து கீழே இறங்கிய 4 இளைஞர்கள், 3 இளம்பெண்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் என்பதும், ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தபோது இந்த விபத்து நேரிட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கிரி சமுத்திரம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் உயிரிழந்த தகவல் தெரிந்ததும் அங்கு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் திரண்டனர்.
மேலும், வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்கு திரண்டு வந்து வளையாம்பட்டு பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடுவதால் இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவதை சுட்டிக்காட்டினர். பிறகு, விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன், வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிப்படுத்தினர்.
பிறகு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப் பட்டு, வளையாம்பட்டு பகுதியில் உடனடியாக தடுப்பு வேலி அமைக்கவும், விபத்து ஏற்படாமல் இருக்க என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டுமோ அதை உடனடியாக செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆறுதல் கூறினார்.
இது குறித்து வாணியம்பாடி கிராமிய காவல துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேலூர் தனியார் கல்லூரி மாணவ,மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடியில் சாலை விபத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.