உமேஷ் பால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த அர்பாஸ் உத்தர பிரதேச போலீஸார் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த இடத்தை பார்வையிடும் காவல் துறை அதிகாரிகள். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் உமேஷ் பால். படம்: பிடிஐ 
க்ரைம்

எம்எல்ஏ கொலையில் சாட்சியை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பிரயாக்ராஜ்: உ.பி. முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கின் முக்கிய சாட்சியை சுட்டுக் கொன்ற குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

உத்தரபிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜு பால் கடந்த 2005-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட உமேஷ் பால், கடந்த 24-ம் தேதி பிரயாக்ராஜ் நகரில் தனது காரிலிருந்து வெளியே வந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் போலீஸார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அர்பாஸ், பிரயாக் நகரில் உள்ள நேரு பூங்காவில் இருப்பதை போலீஸார் கண்டதும் அவரைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் துப்பாக்கியால் சுட முயன்றதால் பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அர்பாஸ் மார்பில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த என்கவுன்ட்டரில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

SCROLL FOR NEXT