க்ரைம்

பெண்ணை கொன்று நகை கொள்ளை - வீட்டு வேலை பணியாளருக்கு 30 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலசுப்பிரமணி ஆயில் மில் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(40). இவரது கணவர் துபாயில் பணிபுரிகிறார். தனது குழந்தைகளுடன் கலைச்செல்வி தனியாக வசித்து வந்தார்.

திண்டுக்கல் நல்லாம்பட்டி காளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர்(32), வாடகை ஆட்டோ ஓட்டுவதுடன் கலைச்செல்வியின் வீட்டிலும் பணிபுரிந்து வந்தார். 2019-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள், பணத்தை சந்திரசேகர் கொள்ளையடித்துச் சென்றார்.

திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார், தலைமறைவாக இருந்த சந்திரசேகரை, சம்பவம் நிகழ்ந்து ஒன்றரை ஆண்டுக்குப் பின்பு கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதிட்டார். சந்திரசேகருக்கு இந்திய தண்டனை சட்டம் 449-வது பிரிவில் 10 ஆண்டு சிறை, 380-வது பிரிவில் 6 ஆண்டு கடுங்காவல் சிறை, 302-வது பிரிவில் ஆயுள் தண்டனை (14 ஆண்டு), ரூ.7,000 அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். இந்த சிறைத் தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT