க்ரைம்

பால் வியாபாரி கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

செய்திப்பிரிவு

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கத்தில் பால் வியாபாரியை கொன்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (35). பால் வியாபாரியான, இவருக்கும், வளசரவாக்கம், நியூ பெத்தானியா நகரைச் சேர்ந்த கோபி என்கிற கர்ணா (48) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

அதன் காரணமாக கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி, வளசரவாக்கம்- ராமகிருஷ்ணா நகரில் தெட்சிணாமூர்த்தியை ஓட ஓட விரட்டி சென்று கோபி வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வளசரவாக்கம் போலீஸார், கோபியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கோபி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இச்சூழலில், ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த கோபி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 2006-ம் ஆண்டு தலைமறைவானார். இந்நிலையில் கோபியை, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2019-ம் ஆண்டு திருவண்ணாமலை பகுதியில் வளசரவாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் தீர்ப்பளித்த பூந்தமல்லி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முருகேசன், கோபிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தைக் கட்ட தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தெட்சிணாமூர்த்தியின் மகன் ராமநாதன் பஹ்ரைனில் இருந்து சாட்சியளிக்க வரவழைக்கப்பட்டார். 20 ஆண்டுக்குப் பிறகு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT