கரூர்: கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் காரில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது குறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் போலீஸார் இன்று (பிப். 27 தேதி) அதிகாலை 4 மணிக்கு ரோந்து சென்ற போது கரூர் நாமக்கல் புறவழிச் சாலையில் நாவல் நகர் ஆர்ச் அருகேகார் ஒன்று நின்று கொண்டிருந்தது. ரோந்து போலீஸார்கார் அருகே சென்று பார்த்தபோது காரின் முன்சீட்டில் வாயில் ரத்தம் வந்த நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து ரோந்து போலீஸார் வாங்கல் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் கரூர் செங்குந்தபுரம் ராமானுஜம் நகரைச் சேர்ந்த அருண் பிரகாஷ் (34) எனத் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி மனைவி சரண்யா, மகன் சருண் உள்ளனர்.
அருண் பிரகாஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் 4 சொந்த வீடுகளின் வாடகை வருமானம் வந்துள்ளது. அருண் பிரகாஷிற்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்புக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மருத்துவர்கள் மது அருந்தக் கூடாது என அறிவுறுத்திய நிலையில் சிறிது நாட்கள் மது அருந்தாமல் இருந்தவர் கடந்த இரு மாதங்களாக மீண்டும் மது அருந்தி வந்துள்ளார். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.