திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்த செவிலியர் பயிற்சி மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள், மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் மகள் கார்த்திகாஜோதி (19). இவர், ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படித்து வந்தார். கடந்த 21-ம் தேதி காலையில் கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்தார்.
மாணவியை உடனடியாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று கார்த்தி காஜோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் ஒட்டன் சத்திரத்தில் தாராபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவியின் உடலை வாங்கமாட்டோம், கல்லூரி நிர் வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். பின்னர் ஒட்டன்சத்திரம் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவியின் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தகவல் அறிந்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன் திரண்டு மாணவியின் மர்ம மரணம் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.