கோவை: கோவை அருகே உள்ள பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞர்கள் சிலர் அடங்கிய கும்பல், கல்லூரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்தன.
கடந்த 2019-ம் ஆண்டு இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட போலீஸில் புகார் அளித்தார். பின்னர், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தற்போது சிபிஐ விசாரித்து வருகின்றனர். முதலில் மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து மேலும், ஏராளமானோர் இக்கும்பல் மீது புகார் அளித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கடந்த 2019-ம் ஆண்டு மே மோதம், கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம், கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஒதுக்கப்பட்ட தனியறையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில், சாட்சி விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது.
அறைக் கதவுகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் அழைத்து வரப்படவில்லை. அதற்கு மாற்றாக சிறையில் இருந்தபடி காணொலிக்காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப் பட்டனர். அதேபோல், பாதிக்கப்பட்டவர்களும் நேரடியாக அழைத்து வரப்படவில்லை. அவர்களும் ரகசிய இடத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக சாட்சியம் அளித்தனர்.