புதுச்சேரி: புதுவை வாணரப்பேட்டை தமிழ் தாய் நகரைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே சித்ராவுக்கு, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் ஓ.டி பச்சையாங்குப்பத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாலு (எ) ராவணன் என்பவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. பாலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாலுவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில் பாலு அடிக்கடி சித்ரா வீட்டுக்கு வந்து செல்வார். பாலுவின் குழந்தையை சித்ரா பராமரித்து வந்தார். கடந்த சில நாட்களாக பாலு தினமும் வேலைக்கு சென்று விட்டு சித்ரா வீட்டிலேயே தங்கி விடுவார். இதற்கு சித்ராவின் கணவரும் சம்மதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சித்ரா வீட்டுக்கு வந்த பாலு, அவரது கணவரை விட்டு தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
இதற்கு சித்ரா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலு, பெட்ரோலை சித்ராவின் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, பாலுவை வீட்டில் இருந்து வெளியே செல்ல விடாமல் வளைத்து பிடித்தார். இதில் இருவரும் தீயில் கருகினர்.
கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலு இறந்தார். ஆபத்தான நிலையில் சித்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் சித்ராவிடம் நீதித்துறை நடுவர் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.