இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஃபார்மஸி கல்லூரியின் முதல்வர் மீது முன்னாள் மாணவர் தீவைத்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கல்லூரி முதல்வருக்கு தீவைத்த அந்த முன்னாள் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தூரில் உள்ளது பிஎம் ஃபார்மஸி கல்லூரி. இதன் முதல்வராக இருந்தவர் விமுக்தா சர்மா (54). இவர் மீது அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா (24) என்ற இளைஞர் தீ வைத்தார். அந்த இளைஞர் 7வது செமஸ்டரில் பெயில் ஆகிவிட்டதால் ஆத்திரத்தில் அவர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. கல்லூரி செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தியில் அவர் இந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் அசுதோஷ் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஆட்சியர் இளையராஜா கூறினார்.
போலீஸ் விசாரணையில் அந்த நபர் மீது ஏற்கெனவே கல்லூரி நிர்வாகம் சார்பில் பல புகார்கள் வந்துள்ளதும் தெரியவந்தது. முதல்வர், மற்ற ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். மாணவர் அசுதோஷ் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாக அந்தப் புகார்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் தான் கடந்த வாரம் சம்பவத்தன்று கல்லூரி முதல்வர் விமுக்தா சர்மா மீது அசுதோஷ் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நெருப்பு வைப்பதற்கு முன்னால் முதல்வரை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியும் உள்ளார். தீ விபத்தில் விமுக்தா சர்மாவுக்கு 70 சதவீதம் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.