சென்னை: கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரை அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 13-ம் தேதி பணிக்குச் செல்வதற்காக கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிரசாந்தின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதேபோல், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாஸ்து நிபுணர்ராமலிங்க சாஸ்திரி, கே.கே.நகர்80 அடி சாலையில் நடந்து செல்லும்போது, அங்கு வந்த அதே வழிப்பறி கும்பல் அவரது செல்போனையும் பறித்துச் சென்றது. இதேபோல், மேற்கு மாம்பலத்தில் தனியார் ஆய்வகத்தின் உதவியாளராக பணிபுரியும் பெண் உட்பட 5 பேரிடம் அடுத்தடுத்து 45 நிமிடங்களில் செல்போன்கள் பறிக்கப்பட்டன.
இது தொடர்பாக கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். தலைமறைவான வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது அம்பத்தூரைச் சேர்ந்த பாட்ஷா(28) என்பவர் தலைமையிலான கும்பல் என்பதும், இவர்கள் அசோக்நகர், கே.கே.நகர், மாம்பலம், அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் சாலையில் நடந்து செல்வோரின் செல்போன்களை குறிவைத்து பறித்தது தெரிந்தது.
இதையடுத்து போலீஸார், பாட்ஷாவின் கூட்டாளிகளான அஜய், சபியுல்லா, கிருபா, விக்கி, நாகூர் மீரான் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். வழிப்பறிக்கு மூளையாகச் செயல்பட்ட பாட்ஷா தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் பாட்ஷாவை போலீஸார் நேற்று முன்தினம்கைது செய்தனர். விசாரணையில், பாட்ஷா தனது கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து செல்போன்பறிப்பில் ஈடுபட வைத்திருப்பதும், வழிப்பறியில் கிடைத்த செல்போன்களை கூரியர் சேவை மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.