சென்னை: வீட்டிலிருந்த மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, மேற்கு மாம்பலம், ராஜீவ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பானுமதி (66). இவர், கடந்த 17-ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் பானுமதியிடம், அவரது உறவினர் பிளம்பிங் வேலை செய்ய அனுப்பி வைத்ததாக கூறினார். ஏற்கெனவே பிளம்பிங் வேலை செய்ய ஆட்கள் வருவதாக இருந்தது. எனவே இதை நம்பிய பானுமதி அவரை வீட்டுக்குள் அனுமதித்தார்.
அந்த நபர் வீட்டில் வேலை செய்வது போல நடித்து கதவை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி பீரோவை திறந்து 17 பவுன் நகைகளை திருடிவிட்டு தப்பியுள்ளார். நீண்ட நேரத்துக்கு பிறகே பீரோவில் இருந்த நகை திருடப்பட்டது பானுமதிக்கு தெரியவந்தது. மேலும், வந்தது பிளம்பர் இல்லை என்பதும் தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டி பானுமதி வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டது வில்லிவாக்கம், செங்குன்றம் ரோடு 20-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஜோதிமணி (58) என்பது தெரியவந்தது.
அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 17 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜோதிமணி மீது ஏற்கெனவே 5 குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.