விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலி யூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 10-ம் தேதி போலீஸாரும், வருவாய்த் துறையினரும் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்றது தெரிய வந்தது. ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மன நலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிர மத்தில் இருந்த ஜபருல்லா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் கெடார் காவல்நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
சிபிசிஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டு, கடந்த 3 நாட்களுக்கு முன் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் டிஎஸ்பி சிவகுமார், இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
மன நலத்துறை தலைவர் புகழேந்தியிடம் சிகிச்சை பெறும் நபர்கள் நீதிமன்ற விசாரணைக்கு தகுதியானவர்களா என்பதை கேட்டறிந்தனர். பின்னர் சிகிச்சை பெறுபவர்களிடம், காப்பகத்தில் எப்படி நடத்தப் பட்டனர் என்பது குறித்தும் பாலியல் சீண்டல் குறித்தும் விசாரணை செய்தனர்.
காப்பக நிர்வாகியின் மீது புகார் அளித்த வட மாநில பெண்ணிடமும் விசாரணை செய்தனர். இதனிடையே விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (http;//www.anbujothiashram.org) முடக்கப்பட்டுள்ளது.