சென்னை: சென்னை கீழ்கட்டளையில் முருகப்பா ஹோல்சேல்ஸ் சப்ளையர்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் பொது மேலாளராக போரூரைச் சேர்ந்த ஹரிஹர சுப்பிரமணியம் (37) என்பவர் இருந்தார்.
இவர் கரோனா காலக்கட்டத்தில் எல்சால்வடார் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு கரோனா மருந்துகளை பெற்று அனுப்பி வைப்பதாக கூறி ரூ.6 கோடியே 29 லட்சத்துக்கு ஆர்டர் பெற்றுக் கொண்டார்.
இதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்ட ஹரிஹர சுப்பிரமணியம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சில மருந்துகளை அனுப்பி வைத்தாராம். அவை போலியான மருந்துகள் என அறிந்த வெளிநாட்டு நிறுவன அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில், போலியான கரோனா மருந்துகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்டதாக ஹரிஹர சுப்பிரமணியம், அவரது மனைவி காஞ்சனா (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.