திருச்சி: திருச்சியில் கைது செய்து அழைத்துச் சென்றபோது தப்ப முயன்றதால்போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட2 ரவுடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு பெண் உட்பட 3பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை (எ) துரைசாமி (40). இவரதுதம்பி சோமு (எ) சோமசுந்தரம் (38).ரவுடிகளான இருவர் மீதும் தமிழகம்முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதொடர்பாக இருவரையும் போலீஸார் தேடி வந்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த இருவரையும் உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் இன்ஸ்பெக்டர் மோகன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 2 பேருக்கும் உடந்தையாக இருந்ததாக சண்முகா நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அனுராதா (42), புத்தூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகநாதன் மகன்கள் பிரதீப்குமார் (29), ஹரிகரன் (24) ஆகியோரை உறையூர் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே ரவுடிகள் துரை, சோமு ஆகிய 2 பேரையும் மார்ச் 4-ம் தேதி வரையிலும், அனுராதா, பிரதீப்குமார், ஹரிகரன் ஆகிய 3 பேரையும் மார்ச் 7 வரையிலும் நீதிமன்ற காவலில் வைக்க ஜே.எம்.6 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர ரவுடி துரை மீதுள்ள 64 வழக்குகளில் 9 வழக்குகளில் அவருக்கு எதிராக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளதால், அந்த வழக்குகளில் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் போலீஸாரால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.