கோவை: கோவை மாநகரைச் சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ், ஆனந்தகுமார் ஆகியோர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தனர்.
அதில், மர்ம நபர்கள் தங்களது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, தங்களுக்கு தெரியாமல் ஆன்லைன் வாயிலாக தங்களது கிரெடிக் கார்டு, கடன் வழங்கும் செயலிகள் ஆகியவற்றை பயன்படுத்தி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இச்செயலில் ஈடுட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தனர்.
அதன் பேரில், காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், கோவைப் புதூரைச் சேர்ந்த விக்னேஷ்(31) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது,‘‘டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் விக்னேஷ் தனது நண்பர்களின் ஆவணங்கள், செல்போன் எண்களை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி, அவர்களின் வங்கிக் கடன் அட்டைகள் மூலமும், ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் மூலமாகவும் கடன் பெற்று ரூ.6 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.
இதையடுத்து விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவர் பிடெக் ஐடி படித்துள்ளார். இவரிடம் இருந்து 3 கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்’’ என்றனர்.