க்ரைம்

திருச்சியில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை இரும்புக் கம்பியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை இரும்புக் கம்பியால் தாக்கி வழிப் பறியில் ஈடுபட்டு வந்த ரவுடி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி காட்டூர் கணேஷ் நகர்ரோஜா தெருவைச் சேர்ந்தவர் முகிலன் மகன் உதயன் (37). இவர், நேற்று முன் தினம் இரவு 12 மணியளவில் கொண்டையம் பேட்டை பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒருவர், திடீரென உதயனின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில், நிலை தடுமாறி உதயன் கீழே விழுந்தவுடன், அந்தப் பகுதியில் மறைந்து நின்று கொண்டிருந்த மேலும் 2 பேர் வந்து, உதயனை அருகில் உள்ள சாலையோர புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, கத்தியால் உதயனை பல்வேறு இடங்களில் வெட்டினர். இதனால், மயங்கிய உதயனிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து தகவலறிந்த துணை ஆணையர் அன்பு, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதிதா உள்ளிட்டோர் அங்கு சென்று, உதயனை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர்கள் 3 பேர் கையில் கத்தியுடன் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை சர்வீஸ் சாலையில் இயல்பாக நடந்து சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் மாநகர் முழுவதும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையால் 3 பேரில் ஒருவர், ஓயாமரி அருகே காவிரிக் கரைப் பகுதியில் போலீஸாரிடம் சிக்கினார். விசாரணையில், கும்பகுடி வேலாயுதங்குடியைச் சேர்ந்த குமார் மகன் வசந்த் என்ற கும்பக்குடி வசந்த் (23) என்பதும், ரவுடியான இவர், தனது நண்பர்களான திம்மராய சமுத்திரத்தைச் சேர்ந்த அருள்மொழி மகன் விக்கி என்ற விக்னேஷ்(23),

சேதுராமன் மகன் சந்தோஷ்குமார் என்ற மொட்டை சந்தோஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து, சாலையில் செல்வோரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து, வசந்த் ஸ்ரீரங்கம் குற்றப் பிரிவு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர், வழிப்பறி தொடர்பாக உதயன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து கும்பக்குடி வசந்த் மற்றும் விக்னேஷ், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப், கத்தி உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்பக்குடி வசந்தின் தந்தை, பொன்மலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். வழிப் பறியில் ஈடுபட்டவர்களை குற்றம் நிகழ்ந்து 24 மணி நேரத்துக்குள் கைது செய்த போலீஸாரை, மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.

இவர்கள் 3 பேரும் அதே நாளில் ஏற்கெனவே பெரம்பலூரைச் சேர்ந்த மணிகண்டன்(37) என்பவரைத் தாக்கி செல்போன், பணத்தை பறித்ததும் தெரியவந்ததால், அந்த வழக்கும் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இவர்கள் 3 பேரும் வேறு வழிப் பறிகளில் ஈடுபட்டுள்ளனரா என போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT