க்ரைம்

விருதுநகர் | கோயிலில் பலியிட வன விலங்குகளை வேட்டையாடிய கிராமத்தினர் - 30 முயல்கள், கீரிகள் பறிமுதல்

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோயிலில் பலியிடுவதற்காக காட்டுப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய கிராம மக்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட 30 முயல்கள், 3 கீரிகள், ஒரு அணில் மற்றும் ஒரு கௌதாரி ஆகியவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புதூர், கருத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் சிவராத்திரியை முன்னிட்டு காளியம்மன் கோயிலில் வன விலங்குகளை வேட்டையாடி படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதேபோன்று, இந்த ஆண்டும் இன்று (22ம் தேதி) காளியம்மன் கோயிலில் வன விலங்குகளை பலியிடுவதற்காக சாத்தூர், ஆர்.ஆர். நகர் பகுதிக்கு 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வந்துள்ளனர்.

இவர்கள், சாத்தூரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியிலும், ஆர்.ஆர். நகர் பகுதியைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியிலும் இரவுநேரத்தில் நுழைந்து வன விலங்குகளை வேட்டையாடியுள்ளனர். பின்னர், வேட்டையாடிய வன விலங்குகளுடன் 3 லாரிகள், 5 கார்களில் சாத்தூர் மற்றும் ஆர்.ஆர். நகர் பகுதியிலிருந்து நத்தம் நோக்கி புறப்பட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த வன பாதுகாவலர் கார்வேந்தன் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நான்குவழிச்சாலையில் பேரிகேட் அமைத்து வன விலங்குகளை வேட்டையாடி திரும்பியவர்கள் வந்த லாரிகள் மற்றும் கார்களை மடக்கிப் பிடித்தனர். வாகனங்களில் வனத்துறையினர் சோதனையிட்டபோது அதில், காட்டுப் பகுதியில் வேட்டையாடப்பட்ட 30 முயல்கள், 3 கீரிகள், ஒரு அணில் மற்றும் ஒரு கௌதாரி ஆகியவைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அதையடுத்து, வேட்டையாடப்பட்ட வன விலங்குகளை விருதுநகரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டுவந்தனர். மேலும், வன விலங்குகளை வேட்டையாடிய 3 லாரிகள், 5 கார்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். விலங்குகளை வேட்டையாடிய வந்த 130 பேரை பிடித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT