விழுப்புரம்: தாயைப் பழிவாங்கும் நோக்கில் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே கொண்ட சமுத்திரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (41), கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இது குறித்து அப்பெண், தன் கணவரிடம் கூறியுள்ளார். அவர், இதுகுறித்து சேகரிடம் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இதனால், அப்பெண்ணை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்த சேகர், கடந்த 30.7.2016-ல் அப்பெண்ணின் குடும்பத்திற்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் அப்பெண்ணின் மகளான 12 வயது சிறுமியை பின்தொடர்ந்து வந்து, சிறுமியின் தலையில் கல்லால் பலமாக தாக்கினார். இதில் அச்சிறுமி அதே இடத்தில் மயங்கி விழ, சேகர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கண்விழித்த பிறகு அச்சிறுமி தன்னை காட்டிக் கொடுத்து விடுவாள் என்று கருதிய சேகர், அருகில் கிடந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்தார். பின்னர், அச்சிறுமியின் உடலை அதே நிலத்தில் உள்ள பழைய போர் இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர், திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விழுப்புரத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை சிறையில் இருந்து தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதையடுத்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட சேகர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.