சென்னை: அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி சுமார் 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவன தலைவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம், 5கிளைகளுடன் செயல்பட்டு வந்தது.இந்த நிறுவனம், மலேசியாவில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், அந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் மூலம் பிற தொழிலில் தமிழகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீத வட்டி தருவதாகவும் விளம்பரம் செய்தது.
இதை நம்பி ஹிஜாவு மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ரூ.800 கோடி வரைமுதலீடு செய்தனர். ஆனால்,அந்த நிறுவனம் உறுதி அளித்தபடி செய்யாமல் மோசடி செய்தது.
இதுகுறித்த புகார்களின் பேரில்தமிழக பொருளாதார குற்றப்பிரிவுபோலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக அந்நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ஹிஜாவு நிறுவனத்தைசேர்ந்த இயக்குநர்கள், நிர்வாகிகள் என 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போலீஸாரால் தேப்பட்டு வந்த ஹிஜாவு நிறுவன தலைவர் சவுந்திரராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுநீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, காவலில்எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். அத்துடன், இந்த வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தொடர்ந்து தேடி வருகின்றனர்.