ஹார்ஷல் சிவாஜி 
க்ரைம்

சென்னையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.15 லட்சம் மோசடி: மகராஷ்டிர இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள தனியார் வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகுவைத்து ரூ.15 லட்சம் மோசடிசெய்த வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

மகராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹார்ஷல் சிவாஜி. இவர் சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் தங்கியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தம்புச்செட்டி தெருவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 397.20 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து ஹார்ஷல் சிவாஜி ரூ.15,16,200 கடனாக பெற்றுள்ளார். ஆனால், கடன் பெற்ற பிறகுவட்டி தொகை எதுவும் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அவர் அடகு வைத்த நகைகளை வங்கிநிர்வாகம் ஏலம் விடுவதற்கு திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அடகு வைக்கப்பட்டிருந்த அந்த நகைகள் அனைத்தையும் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது ஹார்ஷல் சிவாஜி அடகு வைத்த நகைகள் அனைத்தும் தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக ஹார்ஷல் சிவாஜிவை வங்கி ஊழியர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து எசுபிளனேடு காவல் நிலையத்தில் வங்கியின் மேலாளர் குருலட்சுமி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீஸார், பாரிமுனையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தலைமறைவாக இருந்த ஹார்ஷல் சிவாஜியைநேற்று முன்தினம் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஹார்ஷல் சிவாஜி, தங்க நகை கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த 2020-ம்ஆண்டு மே மாதம் போலி நகைகள் அடகு வைத்து ஏமாற்றியதாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT