நாமக்கல்: மூதாட்டியை தகாத வார்த்தைகளால் பேசி, கீழே தள்ளிவிட்ட பள்ளிபாளையம் போலீஸ் ஏட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பள்ளிபாளையம் கண்டிப்புதூரைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (80). இவர் மருமகள்கள் ஆதரவில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கவனிப்பின்றி விடப்பட்டார். இதனால் மருமகள்கள் தன்னை ஆதரிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கடந்த 13-ம் தேதி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ் ஏட்டு யுவராஜ், அய்யம்மாளை கீழே தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அங்கிருந்த மற்றொரு காவலர், காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இல்லை.
எனவே பிறகு வரும்படி அய்யம்மாளிடம் கூறி அனுப்பியுள்ளார். இது குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏட்டு யுவராஜை மாவட்ட போலீஸ் எஸ்பி கலைச்செல்வன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.