சென்னை: அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.800 கோடி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன பெண் நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. 5 இடங்களில் இதன் கிளைகளும் இருந்தன. ‘இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக மலேசியாவில் எண்ணெய்க் கிணறு இருக்கிறது.
அதில் கிடைக்கும் வருமானம் மூலம், தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறோம். எங்களிடம் முதலீடு செய்தால் 15 சதவீத வட்டி தரப்படும்’ என்று இந்த நிறுவனம் விளம்பரம் செய்தது.
இதை நம்பி, ஹிஜாவு மற்றும் அதன் கிளைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ரூ.800 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், அந்த நிறுவனம் உறுதி அளித்தபடி வட்டி கொடுக்கவில்லை. கட்டிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்த புகார்களின்பேரில், பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்டமாக, இந்த நிறுவனம் தொடர்புடைய 32 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர்கள், நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த பெண் நிர்வாகிகள் திருவேற்காடு சாந்தி பாலமுருகன், விருகம்பாக்கம் கல்யாணி, சென்னை அண்ணா நகர் சுஜாதா பாலாஜி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட 3 பேரும் ஹிஜாவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளனர். மேலும், முகவர்களாகவும் செயல்பட்டு, 2,835 பேரிடமிருந்து ரூ.235 கோடி வசூலித்துக் கொடுத்துள்ளனர். மோசடிக்கு உடந்தையாகவும் இருந்துள்ளனர்” என்றனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.