விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டல புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் அத்துமீறல், அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏற்கெனவே 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த காப்பகத்தின் நிர்வாகி மனைவி உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் வந்தது.
சலீம்கான் என்பவர், இக்காப்பகத்தில் சேர்த்த வயதான தனது மாமாவை காணவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் உரிய அனுமதியின்றி இந்த ஆசிரமம் நடைபெற்று வருவது தெரிய வந்தது. இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் அங்கு நேரில் சென்று, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
முதற்கட்டமாக ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீதும் அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வந்தது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது,
அடித்து துன்புறுத்தியது, ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்கு கடத்தியது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கெடார் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில், அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின் நீங்கலாக 4 பேர் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, குரங்கு தாக்கி காயமடைந்ததாக முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்ந்த அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின் ஆகிய இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்றுபிற்பகல், மரியா ஜூபின் (42) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார். மருத்துவமனை வாசலிலேயே அவரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ஆசிரம ஊழியர்களான தெலங்கானா மாநிலம், ரெங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (35), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தாஸ் (75) மற்றும் விழுப்புரம் மாவட்டம் அய்யனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களை சேர்த்து கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் இருந்து வரும் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் இன்று டிஸ் சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவரை கைது செய்ய கெடார் காவல்நிலையத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், முண்டியாம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 203பேர்களில் 99 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 44 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
மற்றவர்கள் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை வளத்தி, கடலூர் காப்பகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மற்றொரு ஆசிரமத்திலும் சோதனை: இச்சிக்கலுக்கு நடுவே, வானூர் அருகே புளிச்சபள்ளம் கிராமத்தில் உள்ள ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள அனாதைகளுக்கான கருணை இல்லத்தை நேற்று மாலை 5 மணி அளவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் தங்கவேலு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் 53 ஆண்கள், 39 பெண்கள் என மொத்தம் 92 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது வருவாய் துறையின் நேரடி விசாரணையில் தெரிய வந்தது. விசாரணையின் போது, கருணை இல்ல நிர்வாகிகள் அரசு அங்கீகாரம் பெற்றதற்கான ஆவணங்களை அதிகா ரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.