ரயிலில் திருடியதாக கைது செய்யப்பட்ட ஹரீஷ் பாபு . 
க்ரைம்

காட்பாடி | ரயில் பயணிகளிடம் திருடிய எம்.பி.ஏ. பட்டதாரி கைது

செய்திப்பிரிவு

வேலூர்: சபரி விரைவு ரயிலில் நேற்று முன்தினம் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பிரீத்தி மற்றும் சசிதரன் ஆகியோர் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்தனர்.

இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையம் வந்தபோது டாக்டர் பிரீத்தியின் செல்போன் இருந்த கைப்பை மற்றும் சசிதரன் உள்ளிட்ட 5 பேரின் செல்போன்கள், ஒரு லேப் டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக காட் பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் புகாரளித்தனர்.

அதன்பேரில், ஆய்வாளர் சித்ரா தலைமையிலான காவலர்கள் தனிப்படை அமைத்து விசா ரணை மேற்கொண்டனர். மேலும், காட்பாடி ரயில் நிலைய நடை மேடைகளில் சுற்றித்திரிந்த சந்தேக நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்கரெட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரீஷ்பாபு (29) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். ரயில்வே காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, சபரி விரைவு ரயிலில் பெண் டாக்டர் பிரீத்தி உள்ளிட்ட பயணிகளிடம் செல்போன், லேப்டாப் திருடியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 6 செல்போன்கள், ஒரு லேப்டாப், 5 ப்ளூடூத் ஏர்-பாட்ஸ், 2 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் பெண் டாக்டரின் பையை பறிமுதல் செய்தனர்.

அந்த பையில் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன. ஹரிஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ரயில்களில் திருட தொடங்கியுள்ளார். எம்.பி.ஏ பட்டதாரியான அவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஒருமுறை மது போதையில் காட்பாடிக்கு ரயிலில் பயணம் செய்தபோது சார்ஜரில் இருந்த செல்போன் ஒன்றை திருடியுள்ளார்.

பின்னர், திருடுவதை வழக்கமாக்கி கொண்டார். விடுமுறை நாட்களில் ரயிலில் பயணம் செய்து திருட தொடங்கியுள்ளார். இதையடுத்து, சபரி ரயிலில் பயணிகளிடம் செல்போன் உள்ளிட்டவற்றை திருடியதாக ஹரீஷ் பாபுவை ரயில்வே காவல் துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT