சென்னை: ஆந்திராவிலிருந்து 451 கிலோ கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சாகடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சென்னை செங்குன்றம் போலீஸார் சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி வேனில் 18 மூட்டைகளில் 100 கிராம் பொட்டலங்களாக பிரித்துவைக்கப்பட்டிருந்த 451 கிலோ கஞ்சாவைபோலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பைனான்சியரான சிராஜுதீன், மினி வேன்உரிமையாளர் அருண்பாண்டி, விக்னேஷ்,சென்னையைச் சேர்ந்த சரவணமூர்த்தி, விசாகப்பட்டிணத்தை சேர்ந்த நக்கா பானு பிரகாஷ், கண்டி கிருஷ்ணா, விழுப்புரத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோர்மீது செங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றநீதிபதி சி.திருமகள், குற்றம் சாட்டப்பட்ட நக்கா பானு பிரகாஷ் தலைமறைவாக இருப்பதால் மற்ற 6 பேர் மீதான வழக்கைமட்டும் விசாரித்தார். கஞ்சா கடத்தலில்ஈடுபட்டதாக மினி வேன் உரிமையாளரான அருண்பாண்டி மற்றும் விக்னேஷ் ஆகியோரது குற்றச்சாட்டுகள் மட்டும்அரசுத் தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், மதுரைபைனான்சியர் உள்ளிட்ட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார். மேலும், அருண்பாண்டிக்கு ரூ.2.90லட்சமும், விக்னேஷூக்கு ரூ. 1.70 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.