புதுச்சேரி: புதுச்சேரி பெரியகடை காவல் சரகத்துக்குட்பட்ட பாரதி வீதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் மப்டி உடையில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.
இதையடுத்து அங்கிருந்த கடலூர், விழுப்புரம், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பெண்களை மீட்ட போலீஸார், மசாஜ் சென்டர் உரிமம் எடுத்து பாலியல் தொழில் நடத்திய காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரைச் சேர்ந்த சந்திரகுமார் (32) என்பவரை கைது செய்தனர். மசாஜ் சென்டர் நடந்த வீட்டினை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீதும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் அண்ணா சாலையில் உள்ள ஒரு ஸ்பாவில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் பாலியல் தொழில் நடப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஸ்பா உரிமையாளரான அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சரவணன் (36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அந்த இடத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அங்கிருந்து ஒரு பெண்னும் மீட்கப்பட்டார்.
இதுபோல் உருளையன்பேட்டை காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் செங்குந்தர் வீதியில் உள்ள பிரபல கெஸ்ட் ஹவுசில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை போலீஸார் மீட்டனர். அங்கிருந்த புரோக்கர்களான கடலூர் அருகே கோதண்டராமாபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் (60), புதுச்சேரி கொம்பாக்கம் ரைஸ்மில் வீதி நாராயணன் (42) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய நபரான வேல்ராம்பேட்டைச் சேர்ந்த ராஜாமணி தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.