கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர், துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை ஆரப்பாளையம் பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சத்தியபாண்டி(31). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு கோவை காந்திபுரத்தில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொலை செய்யப்பட்ட வழக்கில் சத்தியபாண்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், பிணையில் வெளியே வந்த சத்தியபாண்டி விளாங்குறிச்சியில் தங்கியிருந்து, ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்கால் தோட்டத்தில் உள்ள இளநீர் கடையில் நேற்று முன்தினம் மாலை சத்தியபாண்டி இளநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் சத்தியபாண்டியை அரிவாளால் வெட்டினர். துப்பாக்கியாலும் மூன்று முறை சுட்டனர். இதில் சத்தியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரேஸ்கோர்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துணை ஆணையர் சந்தீஷ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினார். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சத்தியபாண்டியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மார்பு, வயிறு, முதுகு ஆகிய இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்ததும், கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
உயிரிழந்த சத்தியபாண்டி மீது கோவை மட்டுமின்றி மதுரை போலீஸிலும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாகவோ, முன்விரோதம் காரணமாகவோ அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.