க்ரைம்

கோவை | துப்பாக்கியுடன் சுற்றிய மூவர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவை உக்கடம் போலீஸார், லங்கா கார்னர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரயில்வே பாலம் அருகே, சந்தேகப்படும்படி 3 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீஸாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். போலீஸார் மூன்று பேரையும் விரட்டிப் பிடித்தனர். அவர்களிடம் ஏர்கன் வகை துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

விசாரணையில், பிடிபட்ட நபர்கள் திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (28), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (37), சிங்காநல்லூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கவுதம் (28) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதில் அஜித்குமார் கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலையும், சந்திரசேகர் பீளமேட்டில் தங்கியிருந்து ஓட்டுநர் வேலையும் செய்து வருகின்றனர்.

போதிய அளவுக்கு வருமானம் இல்லாததால், கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸார், மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT